
கும்பகோணம், கோடை, சேகரி அத்தை… இந்த மூன்றும் சேர்ந்தால், அது வெறும் நினைவுகளாக மட்டும் இருக்காது; ஒரு கால இயந்திரம் போல, நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்று விடும்.
எண்பதுகளுக்கு முன்பு, கும்பகோணத்தில் கோடை என்றால் வெயில் மட்டும் அல்ல; அது சேகரி அத்தை வருகையோடு தொடங்கும் ஒரு திருவிழா. ஏப்ரல் முதல் வாரம், அத்தை வீட்டு வாசலில் கால் வைக்கும்போதே, வீடு முழுக்க ஒரு மின்சாரம் பாய்ந்தது போலிருக்கும். சாந்தி, உமா, முரளி… அத்தை குழந்தைகள் எல்லாரும் கூடி வந்தால், அப்புறம் வீடு அல்ல, அது ஒரு குட்டி சர்க்கஸ்! அத்திம்பேர் கொஞ்சம் லேட்டாகத்தான் வருவார்.
அத்தை வந்ததும் முதல் வேலை, வீட்டை ஒரு விளையாட்டு மைதானமாக்குவதுதான். கேரம் போர்டு, தாயக்கட்டைகள், சீட்டுகட்டுகள் எல்லாம் ரெடியாகிவிடும். அத்தை குழந்தைகளும், நாங்களும் சேர்ந்து அணிகள் அமைப்போம், கூட்டணி போடுவோம், சண்டை போடுவோம்… ஆனால், எல்லாமே விளையாட்டுத்தனமாகத்தான். சிரிப்பு, கோபம், ஏமாற்று வேலை, வெற்றி, தோல்வி… எல்லாமே கலந்து ஒரு மயக்கம் போல இருக்கும்.
அத்தையின் வருகையின் மிகவும் சிறப்பான அம்சங்களில் ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் புதிய பொழுதுபோக்குகள் மற்றும் திறன்களை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த திறமை. அது அவரது படைப்பாற்றலின் வருடாந்திர கண்காட்சி போல இருக்கும். ஒரு வருஷம் crochet பைகள், அடுத்த வருஷம் பிளாஸ்டிக் பைகள்… எல்லாமே அவர் கையால் செய்தவை. பாட்டிக்கு, அம்மாவுக்கு, எங்களுக்கும் கூட பரிசாகக் கொடுப்பார். அந்தப் பரிசுகளில் அத்தையின் அன்பு மட்டும் அல்ல, அவரோட படைப்பாற்றலும் தெரியும்.
கோடை என்றால் சினிமா இல்லாமலா? அத்தை படம் தேர்ந்தெடுப்பதில் expert. சிவாஜி படம் ஒன்று, எம்.ஜி.ஆர் படம் ஒன்று, கமல் படம் ஒன்று… இதுதான் formula. தியேட்டரில் படம் முடிந்ததும் விவாதம் தொடங்கும். கதை, பாடல், நடிப்பு… எல்லாவற்றையும் பற்றி…
அத்தை வெறும் விளையாட்டு, சினிமா என்று இருக்கமாட்டார். இன்னொரு அத்தை வீட்டுக்கு, சித்தப்பா வீட்டுக்கு எல்லாம் அழைத்துப் போவார். அந்தப் பயணங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! வருஷாந்திர சாமான் வாங்குவது என்றால், அத்தையை அடிச்சிக்க யாரும் இல்லை.
அத்தை வந்தா, வீடு மிட்டாய் கடையா மாறிடும். பர்பி மைசூர்பாகுன்னு ஸ்வீட் வகைகள்ல அவருக்கு என்ன ஒரு ஸ்பெஷாலிட்டி! காரத்துலயும் அதேதான். வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு கறி வாசனை வீடு முழுக்க… சொர்க்கத்துல இருக்கற மாதிரி இருக்கும். ராத்திரி தயிர் சாதம், மாவடுன்னு … சாப்பிட்டு முடிச்சிட்டு “ஐயோ, இன்னிக்கு எவ்வளவு சாப்பிட்டேன்!”னு நாமளே அசந்து போவோம். அத்தை எப்பொழுதுமே grand-தான்!
அத்தை வந்தா, வீடு மிட்டாய் கடையா மட்டும் மாறாது, ஒரு மினி மார்க்கெட்டாவே மாறிடும். வருஷாந்திர சாமான் வாங்குறதுல அத்தைக்கு எப்படி அத்தனை திறமை? அம்மா, ட்ரெயின் ஃப்ரெண்ட், ஆபீஸ் ஃப்ரெண்ட்னு எல்லார்கிட்டயும் ஆர்டர் வாங்கி, கிராமத்துல இருந்து ஜவ்வரிசி, கடலைப்பருப்பு, உளுந்துன்னு கொண்டுவந்து போட்டுருவாங்க. அப்புறம் அத்தை, பாட்டி, நாங்க எல்லாரும் சேர்ந்து அதை காய வைக்கணும், உடைக்கணும் – கூடம் முழுக்க பரத்தி கொண்டு உட்கார்ந்து, “நீ.. நான்..”ன்னு சண்டை போட்டுக்கிட்டே பருப்பு உடைப்போம்.- தோல் நீக்கணும்… ஒரு பெரிய project-ஏ நடக்கும். அந்த தவிடு வித்த காசுல சேட்டு கடைல பகோடா சாப்பிட்டு, சினிமா பார்க்க போவோம். அட, அந்த சந்தோஷத்துக்கு என்ன சொல்றது!
என் பூணல் அன்னிக்கு எல்லாரும் வெத்த குழம்பு சாப்பிட்டு, டாய்லெட்டுக்கு Q போட்டு நின்னது ஒரு பக்கம்.
அப்பளம் இடுறதுன்னா, அது ஒரு தனி சம்பவம். பாட்டி அப்பளம் இட அப்பா கூட சண்டை போடுறது இன்னொரு பக்கம்.
அப்புறம் வரும் “அந்த” நாள். வாரத்துக்கு ஒரு நாள், எண்ணெய் குளியல் நாள். அத்தை கையில எண்ணெய் கிண்ணத்த பார்த்தாலே ஒரு மாதிரி பகீர்னு இருக்கும். “இன்னிக்கு தப்பிக்க முடியாது”ன்னு ஒரு பக்கம் மனசு சொல்லும். அந்த எண்ணெய் வாசனை, அரப்பு, சூடு தண்ணி, அத்தை தலையில தண்ணி ஊத்துற சத்தம்… எல்லாமே சேர்ந்து ஒரு “திகில்” பட சூழ்நிலைய உருவாக்கும். ஆனா, குளிச்சு முடிச்சிட்டு வந்தா, ஒரு வித “புதுசா பிறந்த” ஃபீலிங் இருக்கும்.
எல்லாரோடும் அத்தை அன்பாகத்தான் இருப்பார். ஆனால், என் மீது அவருக்கு ஒரு தனி பாசம். அதை அவர் சொல்ல வேண்டியதில்லை, அவரோட பார்வையிலேயே தெரியும். சின்னச் சின்ன பரிசுகள், அறிவுரைகள்… எல்லாமே அந்த பாசத்தின் வெளிப்பாடுதான்.
இன்று அத்தை பிறந்த நாள் இந்த நினைவுகள் எல்லாம் வந்து மனசை நிறைக்கின்றன. அத்தை எங்களுக்கு கோடையைக் கொண்டு வந்தார், மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார், அன்பைக் கொண்டு வந்தார். அவர் எங்கள் குடும்பத்தின் உயிர்.
இனிய பிறந்தநாள், சேகரி அத்தை! 🎉😊


Leave a comment